வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறது?

தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது? இது இன்று பலராலும் கேட்கப்பட்டு வருகிற கேள்வி. ஆனால் அந்தக் கேள்வியை நான் ஒருபோதும் கேட்கமாட்டேன். ஏனென்றால் வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறது? என்பதுதான் சரியான கேள்வி என்பதுதான் என் நிலைப்பாடு.

ஆனால் மாலன் உட்பட சில மூத்த வலைப்பதிவர்கள் தமிழ்மணம் வந்தபிறகு பதிவுகளின் தரம் குறைந்து விட்டதாக அபிப்பிராயப் படுகிறார்கள். தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக்காலத்தில் அதுவும் ஒரு நட்புறவுச் சுற்றமாகவும் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வகையிலும் தான் இருந்து வந்தது.

ஆனால் இன்று வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகமாக மாறி வருகின்றன. வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் புதிய வாசகர்கள் பலரும் வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ்மணம் தருகிற விரிந்த பார்வையாளர்கள் மூலம் தமிழ் வலைப்பதிவுகள் புதிய சமூக அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றன. இதுவரை கண்டு கொள்ளாமலிருந்த தமிழ் இதழுலகமும் வலைப்பதிவுகளைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டன. ( தினமலர் வெளியிடும் டாட்காம் என்னும் பத்தியிலும் கல்கியின் வலைபாயுதே என்னும் பகுதியிலும் வலைப்பதிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாடுடே தமிழ்ப்பதிப்பில் விரிவான கட்டுரையே வெளியிடப்பட்டிருந்தது.)

இந்தப் புதிய அங்கீகாரங்கள் புதிதாக வலைப்பதிவுகளில் எழுத வருகிறவர்களுக்கு ஆர்வமூட்டக் கூடியதுதான் என்றாலும் மாலன் தன் பதிவில் எழுதியுள்ளதைப்போல

//தமிழ் மணத்தின் பிரசினை என்னவென்றால், நம்மை கவனிப்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என உறுதியாகத் தெரியுமாதலால், பலர் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். பஸ்ஸ்டாப்பில் நினறு தம்மடிக்கும் கல்லூரிக்காளைகள் போல, கல்யாண வீட்டில் தன் ந்கைகளையும் புடவையையும் மற்றவர்கள் கவனித்துவிட வேண்டும் எனத் தவிக்கிற பெண்மணிகள் போல, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கும் நேரத்தில் அம்மாவின் கவனத்தைத் தன் பால் ஈர்க்க நினைக்கும் குழந்தை போல, இயல்பு திரிந்து நடந்து கொள்கிறார்கள். இன்னொன்று: crowd psychology. தனிமையில் கரப்பான் பூச்சியைக் கண்டு அஞ்சுகிறவன் கலவரத்தின் போது பேருந்தைக் கல்லெடுத்து அடிப்பது போல. //

இந்தப் பிரச்சினை தான் இன்று தமிழ் வலைப்பதிவுகளை ஆட்டிப்படைக்கும் விவகாரங்களுக்கு அடிப்படை.

மூத்த வலைப்பதிவர்கள் பலர் (மாலன் மட்டுமல்ல) ஆரம்பக் காலங்களைப் போன்ற கருத்துப் பரிமாற்ற முறை இருந்திருந்தால் இந்தப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறார்கள். அதையே மாலன் யாகூ360 குறித்த அறிமுகத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் மாறிவரும் காலச்சூழலும், தொழில்நுட்பங்களும் தவிர்க்கமுடியாதவை. இணையத்தில் இதழ்களுக்கு இணையாக வலைப்பதிவுகள் வளர்ந்து வரும் சூழலில் யாகூவின் நட்புவட்டம் மட்டுமே போதுமென்று இருந்துவிடுவது போதுமானதா? என்பது என் மனதில் எழும் கேள்வி.

தமிழை விட ஆங்கிலத்தில் வலைப்பதிவுகள் இன்று புதிய mass media ஆக அறியப்பட்டுவிட்டது. வலைப்பதிவுகள் மற்ற செய்தி ஊடகங்களைப் போலவே வலிமை வாய்ந்த ஊடகங்களாக மாறி வருகின்றன. எனவே தமிழ்மணமோ வேறு எந்தத் திரட்டியாலோ வலைப்பதிவுகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. நன்மை தீமைகள் எல்லா ஊடகங்களைப் போலவே இருக்கத்தான் செய்யும்.

இத்தனை வெளிச்சம் வேண்டாம் என்று நினைத்தால் புதியபதிவு ஒன்றைத் துவக்கி தமிழ்மணத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டு நண்பர்களுக்கு மட்டும் தெரிவித்தால் போதும். மாலன் கூறுவது போல யாகூ360 பதிவு இதற்கு ஏற்றதுதான். ஆனால் தமிழ்மணத்தில் பதிவு செய்துவிட்டால் அதன்பிறகு அது பொது பதிவாக ஆகிவிடும். பொது பின்னாட்ட வசதி இல்லாவிட்டாலும் போலிகள் எங்கேயும் ஊடுருவ முடியும்.

யாகூ பதிவுகளில் பின்னூட்டமிடுபவர் யாரென்று உடனே அறிய முடியும் என்றாலும் இப்போதைய பிரச்சினையான ID க்களையே திருடுகிறவர்கள் யாருடைய ID யையும் பயன்படுத்தி பின்னூட்டமிடலாம் என்பதால் இது பெரிய மாறுதலைத் தந்துவிடாது என்பது என் கருத்து. தவிர யாகூ360 பதிவர்களும் தமிழ்மணத்தில் பட்டியலிடப்பட விரும்புவதால் யாகூவுக்கு மாறுவதால் புதிய பயனேதும் இருப்பதாகத் தெரியவல்லை. எனினும் இது அவரவர் விருப்பம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விதயம்.

பதிவுகளில் முகமூடியுடனும் போலிப்பெயர்களிலும் வந்து பின்னூட்டமிடும் சிலரால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை, தனிநபர் தாக்குதல்கள் போன்றவை வேறுவகையான பிரச்சினைகளாக உள்ளன. யாராவது தொழில்நுட்பரீதியாக இதற்கொரு தீர்வு கண்டு பிடிக்கும்வரை இது தொடர்ந்து கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. திருடர்களாகப் பார்த்துத் திருந்த வேண்டும். அல்லது தகுந்த தொழில்நுட்பம் மூலம் அவர்களை கண்டறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவுகளின் ஒரு தொகுப்பு மட்டுமே. சற்று முன்னேறிய தொழில் நுட்பத்தில் அமைந்த தொகுப்பு எனலாம். வலைப்பதிவுகளில் எழுதுபவர்களையும் எழுதப்படுபவையையும் தமிழ்மணம் நிர்வாகிகள் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவோ பொறுப்பேற்கவோ முடியாது. அவர்கள் தொழில்நுட்பரீதியான நிர்வாகம் மட்டுமே செய்ய முடியும்.

இருந்த போதிலும் அடிப்படையிலேயே ஆபாசமாக எழுதப்படும் பதிவுகளை பதிவு செய்யாமல் தவிர்க்கிறார்கள். பொதுக்கருத்து அடிப்படையில் ஒரு பதிவை தமிழ்மணத்தின் பார்வையிலிருந்து நீக்கவும் வகை செய்திருக்கிறார்கள். அதைத்தவிர அவர்கள் வேறு என்னதான் செய்து விட முடியும்?

செல்வராஜ் தன்பதிவில் தமிழ்மணம் சார்பில் இதைத்தான் தெரிவித்திருக்கிறார். ஆனால் இத்தனை கூக்குரல்கள் எழுந்த போதெல்லாம் மௌனமாயிருந்ததற்கு தமிழ்மணத்தின் நிர்வாகிகள் இந்த ஒற்றை வரியை இதற்கு முன்பே எழுதியிருக்கலாம். அதே சமயம் தமிழ்மணம் என்பது தன்னார்வச் செயல்பாடு என்பதால் அவர்களின் தனிப்பட்ட நேர நெருக்கடிகள் போன்றவற்றையும் நாம் மதித்தாக வேண்டும்.

ஆனால் செல்வராஜ் எழுதியுள்ள இந்த வரிகளில் எனக்கு முரண்பாடு உண்டு.

//யாருக்கேனும் தமிழ்மணம் பற்றிய கேள்விகள் கருத்துக்கள் இருப்பின் தமிழ்மணத்தின் வாசகர் மன்றத்தில் எழுப்பினால் அதனைக் கவனிக்க முடியும். மன்றத்தில் நிர்வாகிகள் மட்டுமன்றி தெரிந்த பலரும் பதில் அளிக்க ஏதுவாய் இருக்கும்.//

(சில வாரங்களுக்கு முன் மதம் சார்ந்த பதிவுகள் பற்றிய பிரச்சினைகள் பற்றி மன்றத்தில் எழுதியிருந்தேன். தமிழ்மணம் நிர்வாகிகள் எவருமே அதைக் கண்டு கொள்ள வில்லை. அதற்காக அவர்களை நான் கேள்வி கேட்க முடியாது என்பதே உண்மை. ஆனால் அதிகாரப்பூர்வ அமைப்பாக, அதில்தான் எழுத வேண்டும் அப்போதுதான் பதிலளிப்போம் என்று சொல்லும்போது பதிலை எதிர்பார்க்க மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.)

தமிழ்மணத்தின் அதிகாரப்பூர்வ குறைதீர்மன்றமாக 'மன்றம்' இருப்பதாக தமிழ்மணம் நிர்வாகிகள் கருதினால் மாலன் கூறியது போல குறைதீர்க்கும் தார்மீகக் கடமையும் அவர்களுக்கு உண்டு. தமிழ்மணத்தின் நிர்வாகிகள் உட்பட அனைவருமே அடிப்படையில் வலைப்பதிவர்கள் தான் என்பதால் தமிழ்மணம் குறித்த பிரச்சினைகளை யார் எங்கு பதிவு செய்தாலும் அவர்களும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தால்தான் தமிழ்மணம் பொது அமைப்பாக அமையும்.

(மனறத்தில் பிரச்சினைகள் எழுப்பப்படுவதால் அவை ஒரே இடத்தில் தலைப்புகளின் அடிப்படையில் சேகரிக்கப்படுகிறது என்ற பயன் இருந்தாலும் மன்றத்தில் நுழைந்து பதிவிடுவதில் வேகக்குறைவு உள்ளிட்ட பல பிரச்சினைகள். பலசந்தர்ப்பங்களில் மன்றம் திறப்பதற்கு வெகுநேரம் காத்திருக்கும் அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. அவரவர் பதிவிலிருந்தே மன்றத்திற்கு எளிதாகச் செல்லும்படி அமைக்க முடியுமா என்று பாருங்கள்.)

என்னைப் பொறுத்தவரை இன்றைய பிரச்சினைகளுக்கு தமிழ்மணமோ அதன் நிர்வாகிகளோ பொறுப்பேற்க முடியாது. அதே சமயம் தொழில் நுட்பத்தீர்வுகள் குறித்து மற்றவர்களை விட தமிழ்மணம் நிர்வாகிகள் அதிகமாக சிந்திக்க முடியும். சிந்திப்பார்கள்; சிந்திக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சொல்லிச் செய்வதை விட சொல்லாமலே செய்வது நல்லதென்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.

***
பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்த சூழலில் அருணாவின் பதிவில் ஆரம்பித்து வழக்கம் போலவே மாலன் தான் அதைச் செய்திருக்கிறார். மாலன் வலைப்பதிவுகளை விட்டு விலகியபோதும் சரி இப்போதும் சரி அவரது கருத்துக்களில் பல எனக்கு உடன்பாடாக இல்லை. அதை நான் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறேன். அதேசமயம் வலைப்பதிவர்கள் சில்ர் தனிப்பட்ட முறையில் மாலன் மீது தொடுக்கும் தாக்குதல்களும் எனக்கு உடன்பாடாக இல்லை.

சுரேஷ்கண்ணன் எழுதிய 'தமிழ்மணம்' காசியுடன் ஒரு சந்திப்பு* என்ற பதிவில் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பட்டியலில் மாலனின் பெயரையே அவர் குறிப்பிடவில்லை. இது தானாக நிகழ்ந்த தவறென்று கூறமுடியாது.
அடுத்து 'காசியிடம் சில கேள்விகள் கேட்டவருக்கு...' என்ற பதிவை இப்படித் துவங்குகிறார்:
//மாலன் என்பவர் தமிழ்மணம் திரட்டித் தருகிற..................................................//

எதனாலோ மாலன்மீது கொண்ட தனிப்பட்ட வெறுப்புதான் உங்களை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கிறது. ஆனாலும் கீழே இப்படியும் எழுதியிருக்கிறீர்கள்.
//மாலன் அவர்களே... இந்த விஷயத்தில்தான் உங்களோடு மாறுபடுகிறேனே ஒழிய, மாலன் என்கிற படைப்பாளியிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன் என்பதையும் உங்கள் மனதின் ஒரத்தில் குறித்துக் கொள்ளவும்//
மரியாதை உள்ளவர் 'மாலன் என்பவர்' என்று எழுத அவசியமென்ன?

மூத்த வலைப்பதிவர்களில் (வயதில் அல்ல) பலரும் தங்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப் படுத்தியவர் அல்லது வலைப்பதிவுகளில் எழுதத் தூண்டியவர் மாலன்தான் என்று தெரிவித்திருந்தனர். அதற்கான மரியாதையாவது, ஒரு முக்கிய தமிழ்ப் படைப்பாளி என்ற அளவிலாவது தேவையற்ற வார்த்தை விடுதல்களைத் தவிர்ப்பது நல்லது. கருத்து முரண்பாடுகளை நாகரிகமாகத் தெரிவித்தால் புரிந்து கொள்ள முடியாதவர் அல்ல.

இது போன்ற செயல்பாடுகளே படைப்பாளிகளை நம்மிடமிருந்து அன்னியப்படுத்த காரணமாக அமைந்தவை என்பதற்கு "வாசகர்களுடன் குறைந்த பட்ச தூரம் வேண்டும்" என்ற சுஜாதாவின் கூற்றும் ஒரு உதாரணம்.

1 comments:

  1. newsintamil says

    நான் இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் மன்றத்திலும் சில விவாதங்கள் நடைபெற்றுள்ளன.