தமிழ்மண தணிக்கையும் வலைப்பதிவர் பிணக்கங்களும்

அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வரும்போது அவ்வப்போது சில இலவசங்களை அறிமுகப் படுத்துவதுண்டு. அந்த இலவசங்களை பின்னர் அவர்களே நினைத்தால் கூட நீக்கி விட முடியாது. சலுகைகளை உரிமைகளாக நினைக்கும் மனோபாவம் இலவசங்களைப் பெறுபவர்களுக்கு ஏற்பட்டு விடுவதுதான் காரணம்.

பின்னர் நிதி நெருக்கடிகளாலும் நிர்வாகக் காரணங்களாலும் அந்த இலவசங்களுக்கு சில விதிமுறைகளை வகுக்க நேரிடும் போதுதான் தலைவலி புரியும். தற்போது காசிக்கு ஏற்பட்டிருப்பதும் அதுபோன்ற நிலைதான்.

அரசியல்வாதிகள் இலவசங்களை வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்காக. ஆனால் காசி வாக்குகளையோ ஆதாயத்தையோ எதிர்பார்த்து தமிழ்மணத்தை உருவாக்கவில்லை. ஆனாலும் கூட அவர் தற்போது சிறிய ஒரு கட்டுப்பாட்டை விதித்தவுடன் ஹிப்போகிரஸி, சர்வாதிகாரம், கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் குரல் எழுப்பப் படுகிறது.

பணம் தருவோம் என்ற போது வேண்டாம் என்று கூறிவிட்டு இப்போது இலவசம் என்பதால் விதிமுறை வகுக்கிறீர்களே என்றும் சில நண்பர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உண்மையில் பலதுறைகளிலும் கட்டண சேவைகள் தருபவர்களின் விதிமுறைகளைப் படித்துப்பாருங்கள். இலவச சேவைகளை விட அதிகமான கட்டுப்பாடுகள் அங்கே தான் இருக்கும்.

தமிழ்வலைப்பதிவர்கள் அனைவரும் தமிழ்மணத்தில் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தமிழ்மணம் இலவச சேவையாகவே நீடித்து வருகிறது. நன்கொடைகள் பெற்றிருந்தாலும் அந்தக் காரணத்துக்காகவே அதிக நன்கொடை, குறைவான நன்கொடை, நன்கொடை தராதவர்கள் என்ற பாகுபாடு வருவதையும் தவிர்த்திருக்கிறார். (அவர் நன்கொடை பெற்றிருந்தால் பெரிய மனசுடன் நன்கொடை தந்துவிட்டு அதைச்சொல்லியே இன்று பலர் அவரைக் கிழித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.)
என்றாலும் தொழில் நுட்ப சுமைகளைக் குறைப்பதற்காக சில வடிகட்டல்கள் தேவைப்படுவதால் தான் இந்த விதிமுறைகளை வகுத்துள்ளதாக காசி தன் அறிவிப்பில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க திரட்டியின் சுமை கூடுகிறது. பதிவுகள் நிறைய எழுதப்படுவதால் திரட்டியில் பதிவுகள் இடம் பெறும் கால அளவு குறைகிறது. எனவே அவசியமற்ற பதிவுகளை நீக்குவது அவசியமாகிறது.

1. மூன்று மாதத்துக்குமேல் புதுப்பிக்கப்படாதவை
2. நுட்பக்காரணங்களால் திரட்டப்படமுடியாதவை
3. பிழையான/காலாவதியான யு.ஆர்.எல்.


இவற்றை நீக்குவது எந்தவிதத்திலும் தவிர்க்க முடியாத ஒன்று.

4. என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை.

-இது குறித்து தான் நிறைய பிரச்சினைகள். தன் முந்தைய பதிவில் காசி இவை எம்மாதிரியான பதிவுகள் என்பது குறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பதிவுகளின் பட்டியலும் தொடுப்புகளும் தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் தொடர்ந்து இருக்கின்றன. சில பதிவுகளின் திரட்டிப் பட்டியல் மட்டுமே மேற்கண்ட காரணங்களால் நீக்கி வைக்கப் படுவதாகத் தெரிகிறது. அவை எவை என்பது குறித்து தற்போது பச்சை விளக்கு முறை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. (தமிழ்மண முகப்பில் உள்ள வலைப்பதிவுகள் பட்டியலில் திரட்டப்படும் பதிவுகளுக்கு முன்னால் பச்சை விளக்கு தெரிகிறது. பச்சை விளக்கு தெரியாத பதிவுகள் திரட்டப்படுவதில்லை எனத் தெரிகிறது.)

ஆபாசப் பதிவுகளை நீக்குவது குறித்து ஆதரவு அளித்த பலரும் இன்று கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர். எது ஆபாசம் என்பதற்கே இன்று விதிமுறைகள் வகுக்க முடியாத நிலை தான். ஒருவருக்கு ஆபாசமாகப் படுவது இன்னொருவருக்கு ஆபாசமாகத் தோன்றாமல் இருக்கலாம்.

அதுபோலவே மதம் உட்பட சில விஷயங்கள் போதை போன்றவை. அவை அளவுக்கு மீறும்போது அழிவைத் தரும். மத சம்பந்தமான கருத்துக்களை அவ்வப்போது யாரும் எழுதலாம். பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது என்பது எழுதுபவரின் கண்ணியத்தையும் மனநலத்தையும் பொறுத்தது.

அதே சமயம் மதத்துவேஷங்களுக்காகவே சில பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டதும், அதற்குப் பதிலடி என்ற பெயரில் வேறு சில பதிவுகள் உருவானதும் அவர்கள் மாறிமாறி எழுதி தமிழ்மணம் திரட்டியை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டதையும் பல தினங்கள் பார்க்க முடிந்தது. இதில் பல நல்ல பதிவுகள் வாசகர்களின் கவனத்தைவிட்டு சில மணித்துளிகளில் கடந்து போக நேரிட்டது. இது தமிழ்மணம் திரட்டியின் நோக்கத்தையே பாழ்படுத்துவதாக அமைந்தது. எனவே தான் அவசியமான பதிவுகள் வாசகரின் கவனத்தை எளிதில் அடைய, தேவையற்ற பதிவுகளை திரட்டியிலிருந்து நீக்கும் முடிவை காசி எடுத்திருக்கிறார்.

பத்துவரி எழுதினால் ஒரு வரியாவது பயனுள்ளதாக இல்லாமல் வெறும் அரட்டை அடிக்கவும் சிலர் வலைப்பதிவுகளை பயன்படுத்தி வருவதால் தான் காசி என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத் தேவையில்லாதவை என்று தணிக்கை செய்யும் முடிவுக்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

"இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும்."

காசியின் இந்த அறிவிப்பையும் பார்த்திருப்பீர்கள். இதற்கு மேலும் சர்வாதிகாரம் என்று கூறுபவர்களைக் குறித்து என்ன சொல்ல?

தமிழ்மணம் தளத்தில் இது போன்ற மாற்றங்கள் செய்யப்படும்போது தொழில் நுட்பபிரச்சினைகளால் அல்லது கவனப்பிழையால் கூட சில பதிவுகள் திரட்டப்படாமல் போகலாம். அவற்றைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளாமல் அவசரப்பட்டு சில நண்பர்கள் கோபப்படுவதும் விலகிப்போக நினைப்பதும் சரிதானா? தணிக்கை என்றதுமே தார்மீகக் கோபம் கொண்ட பிகேஎஸ், பதிவு நீக்கப்படாமலே தவறாகப் புரிந்து கொண்ட அருண் வைத்தியநாதன் என்று அனுபவமுள்ள வலைப்பதிவர்களே அவசரப்படும்போது இதுவும் செவிடன் காதில் ...

வலைப்பதிவன் தனது தளத்தில் கூறியிருப்பது போல
http://technorati.com/tag/
போன்றவற்றை பயன்படுத்துவது தமிழ்மணத்தின் சுமையையும் குறைக்க உதவும். அதேசமயம் தமிழ்மணத்துக்கு மாற்றாகவோ தமிழ்மணத்தை விட மேம்பட்டதாகவோ அதைக் கருத முடியாது. மறுமொழிகளின் எண்ணிக்கையையோ வாசகர் தேர்வு, PDF போன்ற வசதிகளையோ 20 நிமிடங்களுக் கொருமுறை தானாகவே புதுப்பிக்கப் படும் திரட்டி வசதியையோ வேறு திரட்டிகளில் இப்போதைக்கு காணமுடியாது.

சிறப்புக்குறிப்பு:
http://www.thamizmanam.com/tamilblogs/xml-rss2.php என்னும் RSS feed ஐ http://www.google.com/ig என்ற தளத்தில் உள்ளிட்டால் வலைப்பதிவுகளைப் படிக்க முடிகிறது.

12 comments:

  1. வானம்பாடி says

    நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்!


    குமரேஸ் says

    சில இலவசங்களை அறிமுகப் படுத்துவதுண்டு. அந்த இலவசங்களை பின்னர் அவர்களே நினைத்தால் கூட நீக்கி விட முடியாது. சலுகைகளை உரிமைகளாக நினைக்கும் மனோபாவம் இலவசங்களைப் பெறுபவர்களுக்கு ஏற்பட்டு விடுவதுதான் காரணம்.

    பின்னர் நிதி நெருக்கடிகளாலும் நிர்வாகக் காரணங்களாலும் அந்த இலவசங்களுக்கு சில விதிமுறைகளை வகுக்க நேரிடும் போதுதான் தலைவலி புரியும். தற்போது காசிக்கு ஏற்பட்டிருப்பதும் அதுபோன்ற நிலைதான்.

    அரசியல்வாதிகள் இலவசங்களை வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்காக. ஆனால்
    "காசி வாக்குகளையோ ஆதாயத்தையோ எதிர்பார்த்து தமிழ்மணத்தை உருவாக்கவில்லை. ஆனாலும் கூட அவர் தற்போது சிறிய ஒரு கட்டுப்பாட்டை விதித்தவுடன் ஹிப்போகிரஸி, சர்வாதிகாரம், கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் குரல் எழுப்பப் படுகிறது"

    இவ்வாறு கூறுபவர்களை நான் வன்மையாக கண்டிப்பதன் மூலம் காசி அவர்களுக்கு எனது தார்மீக ஆதரவினை தெரிவிக்கின்றேன்


    அன்பு says

    நான் சொல்ல நினைத்ததுக்கும் அதிகமாக, மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். பாராட்டுக்கள் அனுராக்-அப்பா.

    தக்கசமயத்தில் நீங்கள் எழுதிய இந்தச் சிறப்புப்பதிவுக்கு என்றென்றும் நன்றி.


    மு. சுந்தரமூர்த்தி says

    அனுராக் Sr.
    தொழில்நுட்பக் காரணங்களுக்காக சில முடிவுகளை எடுப்பது காசியின் உரிமை. ஆனால் கொள்கை முடிவுகளை பயனர்களை கலந்தாலோசித்தே எடுப்பது ஜனநாயகம். முன்பு செய்ததைப் போல ("ஆபாசப் பதிவுகள்" சம்பந்தமாக)வாக்கெடுப்பு நடத்தி புதிய கொள்கைகளை வகுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நம்பிக்கையின் அடிப்படையில் செய்தது சரியில்லை. வாக்கெடுப்பில் அவருடைய நம்பிக்கை வெற்றி பெற்றாலும் பெறலாம். ஆனால் அதைச் செய்யாத வரையில் தற்போதைய நடவடிக்கைகள் சர்வாதிகாரத் தன்மை கொண்டவையே.


    வலைஞன் says

    மருந்துகளும் சில சமயம் கசக்கத்தான் செய்யும். நோய் முற்றிப் போன பிறகு அறுவை சிகிட்சை தவிர வேறு வழியில்லை. தமிழ்வலைப் பதிவுகள் போய்க்கொண்டிருந்த வழி நேரானதாக இல்லை. கடிவாளமிடாத குதிரை போல தமிழ் வலைப்பதிவுகள் சென்று கொண்டிருந்த நிலையில் ஆலோசனை கேட்பதற்கோ கூறுவதற்கோ உரிய சூழ்நிலை இருக்கவில்லை.


    Anonymous says

    Nalla Niyaayamaana Mathippeedu!


    Anonymous says

    Kusumban Wrote:

    //தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் தமிழ்மணம் என்பது ஒரு வெறும் செய்தியோடை திரட்டி மட்டுமே. அது ஒரு வலைவாசல் என்று பல இடங்களில் காசி கூறியிருக்கின்றார். http://kasi.thamizmanam.com/?item=205 மேலும் இது ஒரு இலவச சேவை என்பதை காசியும், தமிழ்மண நிர்வாகிகளும் கவனத்துடன் சொல்லி வந்திருக்கின்றார்கள். பொதுவில் வைத்தற்கு பாராட்டுப் பட்டயம் கண்டிப்பாக உண்டு. ஆனால் அதற்காக படியளக்கும் தவச தானியம் மற்றும் கசையடிகள் என்ற வெற்று சொல்லாடல்கள் எதற்கு? பிரீயா கொடுத்த பினாயிலைக் கூட குடிக்கிற கூட்டத்துலதான நீயும் (அதாவது நான்) இருக்க? உனக்கெதுக்கு விமர்சனம், கேள்வி கேட்கும் உரிமை என்ற நோக்கத்திற்கு என்ன பெயரிட்டு அழைப்பது? பாசிசமா? போட்டத வாங்கிட்டு போவியா சும்மா தானம் கொடுத்த மாட்டை பல்லைப் புடிச்சு பதம் பாக்குற என்ற கூற்று நியாயமானதுதான். பொதுவில் வராதவரை. கொடுக்கும் கரம் உயர்ந்தே இருக்கும். ஒத்துக் கொள்கின்றேன். அது உங்கள் வீட்டுப் புழக்கடை சமாச்சாரமாகவே இருக்கும்வரை. //


    http://kusumban.blogspot.com/2005/10/blog-post_112978499440463234.html


    துளசி கோபால் says

    நல்ல மதிப்பீடு.

    'காசி'க்கு இப்படி எல்லார்கிட்டேயும் வாங்கிக் கட்டிக்கும்படி ஆனதுக்கு எதாவது காரணம் இருக்கணும்தானே?
    அது என்னவாக இருக்கும்? எதாவது நிர்ப்பந்தமா?


    வலைஞன் says

    நண்பர் சுந்தரமூர்த்திக்கு:

    ஆபாசப்பதிவுகள் குறித்து வாக்கெடுப்பு நடத்தியதைப்போல இப்போதும் நடத்தியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். அன்று 'விஷயம்' ஆபாசமாக இருந்ததனால் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்ட தமிழ் வலைப்பதிவர்களில் எத்தனை பேர் அதற்குப்பிறகு காசியின் பதிவில் நடை பெற்ற மற்றொரு வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தார்கள்? என்பது உங்களுக்குத் தெரியுமா?

    மதம் சம்பந்தமான பதிவுகள் தமிழ்மணத்தை ஆக்கிரமித்திருந்தது குறித்து பல மாதங்களுக்கு முன் நான் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு மடல் எழுதியிருந்தேன். அன்று யாருமே அதைப் பெரிதாக எண்ணவில்லை. எனவே மன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பி மதம் சம்பந்தமான பதிவுகளை தமிழ்மணத்திலிருந்து நீக்கவேண்டுமா? வேண்டாமா? என வாக்கெடுப்பு ஒன்றை பதிவு செய்தேன். அதில் நான் பார்த்த வரையில் இரண்டே இரண்டு வாக்குகள் மட்டுமே (1:1) பதிவாகி இருந்தன. தமிழ்மணம் பயனர்கள் ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் என்றால் ஏன் அன்று வாக்களிக்கவில்லை?. நமது உரிமையை நாமே தீர்மானிக்கும் உரிமை நமக்குத் தரப்பட்டிருந்த போது யாரும் அதைப் பயன்படுத்தாமல் இருந்துவிட்டு இன்று கூக்குரல் இடுவது என்ன நியாயம்? மதம் உட்பட பல பதிவுகள் தரம் தாழ்ந்து செல்வதும், தமிழ்மண வளர்ச்சிக்கும் நோக்கத்திற்கும் தடையாக இருப்பதையும் உணர்ந்து கொண்ட பிறகு காசி தாமே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.

    நமது உரிமைகளை நாமே தீர்மானிக்கும் வகையில் மன்றம் என்ற ஒன்றைத் தந்து ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள் என்ற போது நாங்கள் யாரும் உதவ மாட்டோம்; நீங்கள் தான் உதவ வேண்டும். நீங்கள் தான் பதிலளிக்க வேண்டும் என்று கடமைகளை தட்டிக் கழித்து பொறுப்பை அவர் கையில் கொடுத்தது யார்?

    இப்போது வந்து அவர் சர்வாதிகாரம் செய்கிறார் என்கிறோம்.

    தங்கள் வலைப்பதிவுகளில் மயூரன், தமிழ்ப்பாம்பு ஆகியோர் இந்த விசயத்தில் இன்னொரு விதமான ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


    மு. சுந்தரமூர்த்தி says

    அனுராக்,
    நீங்கள் நடத்திய வாக்கெடுப்பில் இரண்டு பேர்தான் கலந்துகொண்டார்கள் என்பதற்காக யாருக்கும் ஜனநாயகத்தில் அக்கறையில்லை என்று அர்த்தமில்லை. அது சொல்வது உங்கள் பதிவை எத்தனை படிப்பார்கள் என்பதையே (எதிர்மறையாகச் சொல்லவில்லை. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்). வாக்கெடுப்பை நீங்கள் நடத்துவதற்கும், காசி நடத்துவதற்கும் வேறுபாடு உண்டு.

    தமிழ்மணம் மன்றத்தை நானும் படிப்பதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். காசி தமிழ்மணம் தொடர்பாக எழுதும் பதிவுகளுக்கு ஏராளமான பின்னூட்டங்கள் வருகின்றனவே. அரசு அறிவிப்பை கெஜட்டில் வெளியிடுவதற்கும், செய்தித்தாள்களில் வெளியிடும் வித்தியாசத்தைப் போன்றது.


    vv says

    அன்புள்ள சுந்தரமூர்த்தி

    மேலே குறிப்பிட்ட வாக்கெடுப்பு என் பதிவில் நடத்தப் படவில்லை அது மன்றத்தில் நடத்தப் பட்ட வாக்குப் பதிவு. நான் குறிப்பிட்ட இன்னொரு வாக்குப் பதிவு காசியின் பதிவிலேயே நடத்தப்பட்ட வாக்குப் பதிவு. (தட்டச்சு முறை தொடர்பாக) அதிலும் ஆபாசப்பதிவுகள் தொடர்பான வாக்குப்பதிவில் பங்கேற்றவர்களில் 10 சதவீதம் பேர் கூட பங்கெடுக்க வில்லை.

    என்னுடைய இந்தப் பதிவு சுமார் 400 முறை படிக்கப் பட்டிருப்பதாக counter சொல்கிறது. அடுத்தடுத்த பதிவுகளை எழுதிய பிறகு மேலும் 300 எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே ஆர்வமிருக்கும் விஷயமென்றால் படிக்கவே செய்வார்கள் என்பதும் புரிகிறது. ஆனாலும் செய்ய வேண்டிய கடமைகளில் தவறிவிட்டு காசியை வம்புக்கிழுப்பது தவறு என்பதையே நான் கூறுகிறேன். காசியும் வீட்டுப்பாடம் செய்யாமல் இருந்துவிட்டு வீண் விவாதம் செய்பவர்கள் என்று இதைத்தான் கூறுகிறார்.


    Kasi Arumugam says

    அனுராக்,

    அன்றிருந்த மனநிலையிலும், வேலைப்பளுவிலும் நன்றி சொல்லக்கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. விளக்கமான உங்கள் இடுகைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி.