தேவை!
???
என் உள்ளம் எழுப்பிய வினாக்களுக்கு விடை தேடி வலையில் கட்டிய விவாதமேடை
Friday, January 13, 2006 /
Saturday, October 22, 2005 /
இந்தப் பதிவுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கக்கூடாது.
கேட்டால்?
சுட்டுவிடுவேன். (படத்தைத்தான்)
/
தமிழ்மணத்தில் காசியின் உரிமைகள் எவை என்பது குறித்து பல வலைப்பதிவர்கள் வரையறுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் சில நல்ல விஷயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் போன்ற புதிய திரட்டிகளுக்கான தேடுதலை பலரும் துவங்கியிருக்கிறார்கள். மயூரன் தனது பதிவில் கூறியிருப்பது போல தமிழ் வலைப்பதிவுகள் ஒரு கட்டுடைப்புக்கான ஆயத்த நிலையை அடைந்திருக்கின்றன. இது காசியின் அறிவிப்பினால் விளைந்ததெனினும் எந்த ஒரு தொழில் நுட்பமும் அமைப்பும் இந்த நிலைக்கு ஒரு காலகட்டத்தில் வந்தே தீர வேண்டும் என்பது நியதி. இதில் தமிழ் மணத்தையும் காசியையும் குறை கூறிக்கொண்டிராமல் அவர்கள் ஒரு சுயபரிசோதனையை மேற்கொண்டிருந்தாலே இந்தக்கட்டுடைப்புக்கான தேவை புரியும். இன்றைய நிலையில் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள், விலகியவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என்றில்லாமல் அனைவருமே பலதரப்பட்ட திரட்டிகளின் பலனை பரிசோதித்தறிய வேண்டும்.
திரட்டிகள் என்று பார்க்கும்போது என் முந்தைய பதிவில் பார்த்த http://www.google.com/ig தளமும் திரட்டி வசதியை அளிக்கிறது. ஆனால் அவற்றைவிட Blog search Beta மூலம் தமிழ்ப்பதிவுகள் எனத் தேடும்போது சுமார் 25 பதிவுகள் இப்போதைக்கு காணக்கிடைக்கின்றன. ஒரு ஆச்சரியமான விஷயம் இதே தளத்தில் தமிழ்மணம் என்று கொடுத்து தேடினால் 1695 பதிவுகள் காணக்கிடைக்கின்றன. இங்கு பதிவுகளை சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. தேதி வாரியாகவும் வரிசைப்படுத்தி பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட வலைப்பதிவில் எல்லாப் பதிவுகளையும் பார்க்க விரும்பினாலும் பார்க்கலாம்.
எத்தனை திரட்டிகள் வந்தாலும் தமிழ்மணம் மட்டும் தனது தனித்துவத்தில் இன்னும் முன்னணியில் தான் இருக்கிறது. மறுமொழி நிலவரம், தேதிவாரியாக திரட்டு, முந்தைய பதிவுகளின் தேடுதல், வாசகர் மதிப்பீடு, 20 நிமிடங்களுக்கொருமுறை திரட்டுதல் என்ற வசதிகள் வேறு திரட்டிகளில் இதுவரை இல்லை. Blog search என்பது கூட தேடு கருவி எனலாமே தவிர திரட்டி என கூற முடியாது...
ஆனாலும் இவை குறித்த அறிமுகங்களை இந்தச்சூழல் நமக்குத் தந்து கொண்டிருக்கிறது என்பதே நல்ல மாற்றமாகத் தோன்றுகிறது. தமிழ்மணத்தின் முக்கியத்துவமும் மேம்பாடுகளும் இதன்மூலம் மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
Thursday, October 20, 2005 /
அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வரும்போது அவ்வப்போது சில இலவசங்களை அறிமுகப் படுத்துவதுண்டு. அந்த இலவசங்களை பின்னர் அவர்களே நினைத்தால் கூட நீக்கி விட முடியாது. சலுகைகளை உரிமைகளாக நினைக்கும் மனோபாவம் இலவசங்களைப் பெறுபவர்களுக்கு ஏற்பட்டு விடுவதுதான் காரணம்.
பின்னர் நிதி நெருக்கடிகளாலும் நிர்வாகக் காரணங்களாலும் அந்த இலவசங்களுக்கு சில விதிமுறைகளை வகுக்க நேரிடும் போதுதான் தலைவலி புரியும். தற்போது காசிக்கு ஏற்பட்டிருப்பதும் அதுபோன்ற நிலைதான்.
அரசியல்வாதிகள் இலவசங்களை வழங்குவது வாக்குகளைப் பெறுவதற்காக. ஆனால் காசி வாக்குகளையோ ஆதாயத்தையோ எதிர்பார்த்து தமிழ்மணத்தை உருவாக்கவில்லை. ஆனாலும் கூட அவர் தற்போது சிறிய ஒரு கட்டுப்பாட்டை விதித்தவுடன் ஹிப்போகிரஸி, சர்வாதிகாரம், கருத்துச் சுதந்திரம் என்றெல்லாம் குரல் எழுப்பப் படுகிறது.
பணம் தருவோம் என்ற போது வேண்டாம் என்று கூறிவிட்டு இப்போது இலவசம் என்பதால் விதிமுறை வகுக்கிறீர்களே என்றும் சில நண்பர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உண்மையில் பலதுறைகளிலும் கட்டண சேவைகள் தருபவர்களின் விதிமுறைகளைப் படித்துப்பாருங்கள். இலவச சேவைகளை விட அதிகமான கட்டுப்பாடுகள் அங்கே தான் இருக்கும்.
தமிழ்வலைப்பதிவர்கள் அனைவரும் தமிழ்மணத்தில் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தமிழ்மணம் இலவச சேவையாகவே நீடித்து வருகிறது. நன்கொடைகள் பெற்றிருந்தாலும் அந்தக் காரணத்துக்காகவே அதிக நன்கொடை, குறைவான நன்கொடை, நன்கொடை தராதவர்கள் என்ற பாகுபாடு வருவதையும் தவிர்த்திருக்கிறார். (அவர் நன்கொடை பெற்றிருந்தால் பெரிய மனசுடன் நன்கொடை தந்துவிட்டு அதைச்சொல்லியே இன்று பலர் அவரைக் கிழித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.)
என்றாலும் தொழில் நுட்ப சுமைகளைக் குறைப்பதற்காக சில வடிகட்டல்கள் தேவைப்படுவதால் தான் இந்த விதிமுறைகளை வகுத்துள்ளதாக காசி தன் அறிவிப்பில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க திரட்டியின் சுமை கூடுகிறது. பதிவுகள் நிறைய எழுதப்படுவதால் திரட்டியில் பதிவுகள் இடம் பெறும் கால அளவு குறைகிறது. எனவே அவசியமற்ற பதிவுகளை நீக்குவது அவசியமாகிறது.
1. மூன்று மாதத்துக்குமேல் புதுப்பிக்கப்படாதவை
2. நுட்பக்காரணங்களால் திரட்டப்படமுடியாதவை
3. பிழையான/காலாவதியான யு.ஆர்.எல்.
இவற்றை நீக்குவது எந்தவிதத்திலும் தவிர்க்க முடியாத ஒன்று.
4. என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத்தேவையில்லாதவை.
-இது குறித்து தான் நிறைய பிரச்சினைகள். தன் முந்தைய பதிவில் காசி இவை எம்மாதிரியான பதிவுகள் என்பது குறித்து விளக்கம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பதிவுகளின் பட்டியலும் தொடுப்புகளும் தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்தில் தொடர்ந்து இருக்கின்றன. சில பதிவுகளின் திரட்டிப் பட்டியல் மட்டுமே மேற்கண்ட காரணங்களால் நீக்கி வைக்கப் படுவதாகத் தெரிகிறது. அவை எவை என்பது குறித்து தற்போது பச்சை விளக்கு முறை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. (தமிழ்மண முகப்பில் உள்ள வலைப்பதிவுகள் பட்டியலில் திரட்டப்படும் பதிவுகளுக்கு முன்னால் பச்சை விளக்கு தெரிகிறது. பச்சை விளக்கு தெரியாத பதிவுகள் திரட்டப்படுவதில்லை எனத் தெரிகிறது.)
ஆபாசப் பதிவுகளை நீக்குவது குறித்து ஆதரவு அளித்த பலரும் இன்று கண்டனக்குரல் எழுப்பியுள்ளனர். எது ஆபாசம் என்பதற்கே இன்று விதிமுறைகள் வகுக்க முடியாத நிலை தான். ஒருவருக்கு ஆபாசமாகப் படுவது இன்னொருவருக்கு ஆபாசமாகத் தோன்றாமல் இருக்கலாம்.
அதுபோலவே மதம் உட்பட சில விஷயங்கள் போதை போன்றவை. அவை அளவுக்கு மீறும்போது அழிவைத் தரும். மத சம்பந்தமான கருத்துக்களை அவ்வப்போது யாரும் எழுதலாம். பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது என்பது எழுதுபவரின் கண்ணியத்தையும் மனநலத்தையும் பொறுத்தது.
அதே சமயம் மதத்துவேஷங்களுக்காகவே சில பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டதும், அதற்குப் பதிலடி என்ற பெயரில் வேறு சில பதிவுகள் உருவானதும் அவர்கள் மாறிமாறி எழுதி தமிழ்மணம் திரட்டியை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டதையும் பல தினங்கள் பார்க்க முடிந்தது. இதில் பல நல்ல பதிவுகள் வாசகர்களின் கவனத்தைவிட்டு சில மணித்துளிகளில் கடந்து போக நேரிட்டது. இது தமிழ்மணம் திரட்டியின் நோக்கத்தையே பாழ்படுத்துவதாக அமைந்தது. எனவே தான் அவசியமான பதிவுகள் வாசகரின் கவனத்தை எளிதில் அடைய, தேவையற்ற பதிவுகளை திரட்டியிலிருந்து நீக்கும் முடிவை காசி எடுத்திருக்கிறார்.
பத்துவரி எழுதினால் ஒரு வரியாவது பயனுள்ளதாக இல்லாமல் வெறும் அரட்டை அடிக்கவும் சிலர் வலைப்பதிவுகளை பயன்படுத்தி வருவதால் தான் காசி என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டத் தேவையில்லாதவை என்று தணிக்கை செய்யும் முடிவுக்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.
"இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும்."
காசியின் இந்த அறிவிப்பையும் பார்த்திருப்பீர்கள். இதற்கு மேலும் சர்வாதிகாரம் என்று கூறுபவர்களைக் குறித்து என்ன சொல்ல?
தமிழ்மணம் தளத்தில் இது போன்ற மாற்றங்கள் செய்யப்படும்போது தொழில் நுட்பபிரச்சினைகளால் அல்லது கவனப்பிழையால் கூட சில பதிவுகள் திரட்டப்படாமல் போகலாம். அவற்றைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளாமல் அவசரப்பட்டு சில நண்பர்கள் கோபப்படுவதும் விலகிப்போக நினைப்பதும் சரிதானா? தணிக்கை என்றதுமே தார்மீகக் கோபம் கொண்ட பிகேஎஸ், பதிவு நீக்கப்படாமலே தவறாகப் புரிந்து கொண்ட அருண் வைத்தியநாதன் என்று அனுபவமுள்ள வலைப்பதிவர்களே அவசரப்படும்போது இதுவும் செவிடன் காதில் ...
வலைப்பதிவன் தனது தளத்தில் கூறியிருப்பது போல
http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்
போன்றவற்றை பயன்படுத்துவது தமிழ்மணத்தின் சுமையையும் குறைக்க உதவும். அதேசமயம் தமிழ்மணத்துக்கு மாற்றாகவோ தமிழ்மணத்தை விட மேம்பட்டதாகவோ அதைக் கருத முடியாது. மறுமொழிகளின் எண்ணிக்கையையோ வாசகர் தேர்வு, PDF போன்ற வசதிகளையோ 20 நிமிடங்களுக் கொருமுறை தானாகவே புதுப்பிக்கப் படும் திரட்டி வசதியையோ வேறு திரட்டிகளில் இப்போதைக்கு காணமுடியாது.
சிறப்புக்குறிப்பு:
http://www.thamizmanam.com/tamilblogs/xml-rss2.php என்னும் RSS feed ஐ http://www.google.com/ig என்ற தளத்தில் உள்ளிட்டால் வலைப்பதிவுகளைப் படிக்க முடிகிறது.
Tuesday, August 02, 2005 /
நேற்றிரவு சன் டிவி செய்திகள் பார்த்த போது ஒரு தகவல் மிக மகிழ்ச்சியை அளித்தது. 9990 ரூயாய்க்கான கணினியை அமைச்சர் தயாநிதி மாறன் நாட்டுக்கு அர்ப்பணித்த அந்தச் செய்தி எனக்கு சில மாதங்களுக்கு முன் அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டியது.
கணிப்பொறிகள் அனைவரும் வாங்கும் விலைகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்த விலையில் கணினி உருவாக்கப்படும்; ஜூன் மாதத்தில் 10000 ரூபாய் விலையில் கணினி விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருந்தார் அவர்.
ஜூனில் இல்லாவிட்டாலும் ஆகஸ்டிலாவது பத்தாயிரம் ரூபாய்க்குப் பத்துரூபாய் குறைவாகவே கணினி விற்பனைக்கு வந்தது சந்தோஷமான விஷயம்தானே?
VIA சிப்செட் மைக்ரோபிராசசர், சீகேட்டின் ஹார்ட் டிஸ்க் மற்றும் டிவிஎஸ் எலக்ட்ரானிக்சின் பாகங்களுடன் HCL நிறுவனம் இந்தக் கணினியைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. வேறு நிறுவனங்களும் இதுபோன்ற கணினியைத் தயாரிக்க முன் வந்தால் இன்னும் கூட விலை குறையும் என்று வெளியீட்டு விழாவில் அமைச்சர் கூறினார்.
14,000 ரூபாய் விலையில் விற்கப்பட்ட இந்தக் கணினி இப்போது 9,990 ரூபாய்க்குத் தரப்பட இருப்பதாக HCL நிறுவனத் தலைமை அதிகாரி இதே விழாவில் கூறியிருக்கிறார்.
ஏமாற்றம்-1
இன்றைய செய்தித்தாள்களில் இந்தக்கணினிக்கான விளம்பரங்களை HCL நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 1Ghz/Linux தவிர மற்றபடி எல்லா பிசிக்களின் சராசரியான 128MB RAM/40GB HDD/52X CD ROM/1.44MB FDD/15'' MONITOR/INTERNET KEYBOARD/ MOUSE எல்லாம் இருக்கிறது.
ஆனால் அந்த விளம்பரத்தில் காணும் சிக்கல்கள் இவை:
a fully functional HCL PC at Rs.9,990 only
என்ற முகப்பு விளம்பரத்தில் ஒரு நட்சத்திரக் குறியிட்டு அதன் விளக்கம் சிறிய எழுத்தில் கீழே:
சிக்கல்-1
(*) Conditions apply. Rs.1,250/- additional for delivery, installation & after sales service for 1 year.
(9,990+1,250 = Rs.11,240 [?])
சிக்கல்-2
LST/VST and other levies/taxes extra as applicable.
(அப்படியானால் 11,240+வரிகள் தனி?)
சிக்கல்-3
Accessories shown here may not be the part of standard configuration.
(அமைச்சர் வெளியிட்டது விளம்பரத்தில் உள்ளபபடியான கணினி தான். அப்படியிருக்க இந்தக்குறிப்பின் அவசியம் என்ன? உபயோகிப்பாளர்களுக்கு இவர்கள் தரப்போவது வேறா?)
(யார்) யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்?
10,000 ரூபாய்க்குள் கணினி என்பது உண்மையானால் அனைத்தும் அடங்கிய MRP 10,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டாமோ?
ஏமாற்றம்-2
அமைச்சரால் உலகிலேயே முதன்முறையாக வெளியிடப்பட்ட 9.990 ரூபாய் கணினிக்கு முன்னதாகவே கல்கத்தாவைச் சேர்ந்த Xenitis Infotech நிறுவனம் 'Apna PC' என்ற பெயரில் அதே 9,990 ரூபாய்க்கு கணினியை விற்பனைக்கு விடுத்துள்ள விபரம் அமைச்சருக்கு தெரியுமா?
Wednesday, July 13, 2005 /
தமிழ்மணத்தில் என்ன நடக்கிறது? இது இன்று பலராலும் கேட்கப்பட்டு வருகிற கேள்வி. ஆனால் அந்தக் கேள்வியை நான் ஒருபோதும் கேட்கமாட்டேன். ஏனென்றால் வலைப்பதிவுகளில் என்ன நடக்கிறது? என்பதுதான் சரியான கேள்வி என்பதுதான் என் நிலைப்பாடு.
ஆனால் மாலன் உட்பட சில மூத்த வலைப்பதிவர்கள் தமிழ்மணம் வந்தபிறகு பதிவுகளின் தரம் குறைந்து விட்டதாக அபிப்பிராயப் படுகிறார்கள். தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக்காலத்தில் அதுவும் ஒரு நட்புறவுச் சுற்றமாகவும் வலைப்பதிவர்கள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்யும் வகையிலும் தான் இருந்து வந்தது.
ஆனால் இன்று வலைப்பதிவுகள் ஒரு மாற்று ஊடகமாக மாறி வருகின்றன. வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் புதிய வாசகர்கள் பலரும் வலைப்பதிவுகளை வாசிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ்மணம் தருகிற விரிந்த பார்வையாளர்கள் மூலம் தமிழ் வலைப்பதிவுகள் புதிய சமூக அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றன. இதுவரை கண்டு கொள்ளாமலிருந்த தமிழ் இதழுலகமும் வலைப்பதிவுகளைப் பற்றி எழுத ஆரம்பித்து விட்டன. ( தினமலர் வெளியிடும் டாட்காம் என்னும் பத்தியிலும் கல்கியின் வலைபாயுதே என்னும் பகுதியிலும் வலைப்பதிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாடுடே தமிழ்ப்பதிப்பில் விரிவான கட்டுரையே வெளியிடப்பட்டிருந்தது.)
இந்தப் புதிய அங்கீகாரங்கள் புதிதாக வலைப்பதிவுகளில் எழுத வருகிறவர்களுக்கு ஆர்வமூட்டக் கூடியதுதான் என்றாலும் மாலன் தன் பதிவில் எழுதியுள்ளதைப்போல
//தமிழ் மணத்தின் பிரசினை என்னவென்றால், நம்மை கவனிப்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என உறுதியாகத் தெரியுமாதலால், பலர் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். பஸ்ஸ்டாப்பில் நினறு தம்மடிக்கும் கல்லூரிக்காளைகள் போல, கல்யாண வீட்டில் தன் ந்கைகளையும் புடவையையும் மற்றவர்கள் கவனித்துவிட வேண்டும் எனத் தவிக்கிற பெண்மணிகள் போல, வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருக்கும் நேரத்தில் அம்மாவின் கவனத்தைத் தன் பால் ஈர்க்க நினைக்கும் குழந்தை போல, இயல்பு திரிந்து நடந்து கொள்கிறார்கள். இன்னொன்று: crowd psychology. தனிமையில் கரப்பான் பூச்சியைக் கண்டு அஞ்சுகிறவன் கலவரத்தின் போது பேருந்தைக் கல்லெடுத்து அடிப்பது போல. //
இந்தப் பிரச்சினை தான் இன்று தமிழ் வலைப்பதிவுகளை ஆட்டிப்படைக்கும் விவகாரங்களுக்கு அடிப்படை.
மூத்த வலைப்பதிவர்கள் பலர் (மாலன் மட்டுமல்ல) ஆரம்பக் காலங்களைப் போன்ற கருத்துப் பரிமாற்ற முறை இருந்திருந்தால் இந்தப்பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறார்கள். அதையே மாலன் யாகூ360 குறித்த அறிமுகத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் மாறிவரும் காலச்சூழலும், தொழில்நுட்பங்களும் தவிர்க்கமுடியாதவை. இணையத்தில் இதழ்களுக்கு இணையாக வலைப்பதிவுகள் வளர்ந்து வரும் சூழலில் யாகூவின் நட்புவட்டம் மட்டுமே போதுமென்று இருந்துவிடுவது போதுமானதா? என்பது என் மனதில் எழும் கேள்வி.
தமிழை விட ஆங்கிலத்தில் வலைப்பதிவுகள் இன்று புதிய mass media ஆக அறியப்பட்டுவிட்டது. வலைப்பதிவுகள் மற்ற செய்தி ஊடகங்களைப் போலவே வலிமை வாய்ந்த ஊடகங்களாக மாறி வருகின்றன. எனவே தமிழ்மணமோ வேறு எந்தத் திரட்டியாலோ வலைப்பதிவுகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது. நன்மை தீமைகள் எல்லா ஊடகங்களைப் போலவே இருக்கத்தான் செய்யும்.
இத்தனை வெளிச்சம் வேண்டாம் என்று நினைத்தால் புதியபதிவு ஒன்றைத் துவக்கி தமிழ்மணத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டு நண்பர்களுக்கு மட்டும் தெரிவித்தால் போதும். மாலன் கூறுவது போல யாகூ360 பதிவு இதற்கு ஏற்றதுதான். ஆனால் தமிழ்மணத்தில் பதிவு செய்துவிட்டால் அதன்பிறகு அது பொது பதிவாக ஆகிவிடும். பொது பின்னாட்ட வசதி இல்லாவிட்டாலும் போலிகள் எங்கேயும் ஊடுருவ முடியும்.
யாகூ பதிவுகளில் பின்னூட்டமிடுபவர் யாரென்று உடனே அறிய முடியும் என்றாலும் இப்போதைய பிரச்சினையான ID க்களையே திருடுகிறவர்கள் யாருடைய ID யையும் பயன்படுத்தி பின்னூட்டமிடலாம் என்பதால் இது பெரிய மாறுதலைத் தந்துவிடாது என்பது என் கருத்து. தவிர யாகூ360 பதிவர்களும் தமிழ்மணத்தில் பட்டியலிடப்பட விரும்புவதால் யாகூவுக்கு மாறுவதால் புதிய பயனேதும் இருப்பதாகத் தெரியவல்லை. எனினும் இது அவரவர் விருப்பம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விதயம்.
பதிவுகளில் முகமூடியுடனும் போலிப்பெயர்களிலும் வந்து பின்னூட்டமிடும் சிலரால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை, தனிநபர் தாக்குதல்கள் போன்றவை வேறுவகையான பிரச்சினைகளாக உள்ளன. யாராவது தொழில்நுட்பரீதியாக இதற்கொரு தீர்வு கண்டு பிடிக்கும்வரை இது தொடர்ந்து கொண்டிருக்கும் என்றே தோன்றுகிறது. திருடர்களாகப் பார்த்துத் திருந்த வேண்டும். அல்லது தகுந்த தொழில்நுட்பம் மூலம் அவர்களை கண்டறிந்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.
தமிழ்மணம் தமிழ் வலைப்பதிவுகளின் ஒரு தொகுப்பு மட்டுமே. சற்று முன்னேறிய தொழில் நுட்பத்தில் அமைந்த தொகுப்பு எனலாம். வலைப்பதிவுகளில் எழுதுபவர்களையும் எழுதப்படுபவையையும் தமிழ்மணம் நிர்வாகிகள் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவோ பொறுப்பேற்கவோ முடியாது. அவர்கள் தொழில்நுட்பரீதியான நிர்வாகம் மட்டுமே செய்ய முடியும்.
இருந்த போதிலும் அடிப்படையிலேயே ஆபாசமாக எழுதப்படும் பதிவுகளை பதிவு செய்யாமல் தவிர்க்கிறார்கள். பொதுக்கருத்து அடிப்படையில் ஒரு பதிவை தமிழ்மணத்தின் பார்வையிலிருந்து நீக்கவும் வகை செய்திருக்கிறார்கள். அதைத்தவிர அவர்கள் வேறு என்னதான் செய்து விட முடியும்?
செல்வராஜ் தன்பதிவில் தமிழ்மணம் சார்பில் இதைத்தான் தெரிவித்திருக்கிறார். ஆனால் இத்தனை கூக்குரல்கள் எழுந்த போதெல்லாம் மௌனமாயிருந்ததற்கு தமிழ்மணத்தின் நிர்வாகிகள் இந்த ஒற்றை வரியை இதற்கு முன்பே எழுதியிருக்கலாம். அதே சமயம் தமிழ்மணம் என்பது தன்னார்வச் செயல்பாடு என்பதால் அவர்களின் தனிப்பட்ட நேர நெருக்கடிகள் போன்றவற்றையும் நாம் மதித்தாக வேண்டும்.
ஆனால் செல்வராஜ் எழுதியுள்ள இந்த வரிகளில் எனக்கு முரண்பாடு உண்டு.
//யாருக்கேனும் தமிழ்மணம் பற்றிய கேள்விகள் கருத்துக்கள் இருப்பின் தமிழ்மணத்தின் வாசகர் மன்றத்தில் எழுப்பினால் அதனைக் கவனிக்க முடியும். மன்றத்தில் நிர்வாகிகள் மட்டுமன்றி தெரிந்த பலரும் பதில் அளிக்க ஏதுவாய் இருக்கும்.//
(சில வாரங்களுக்கு முன் மதம் சார்ந்த பதிவுகள் பற்றிய பிரச்சினைகள் பற்றி மன்றத்தில் எழுதியிருந்தேன். தமிழ்மணம் நிர்வாகிகள் எவருமே அதைக் கண்டு கொள்ள வில்லை. அதற்காக அவர்களை நான் கேள்வி கேட்க முடியாது என்பதே உண்மை. ஆனால் அதிகாரப்பூர்வ அமைப்பாக, அதில்தான் எழுத வேண்டும் அப்போதுதான் பதிலளிப்போம் என்று சொல்லும்போது பதிலை எதிர்பார்க்க மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.)
தமிழ்மணத்தின் அதிகாரப்பூர்வ குறைதீர்மன்றமாக 'மன்றம்' இருப்பதாக தமிழ்மணம் நிர்வாகிகள் கருதினால் மாலன் கூறியது போல குறைதீர்க்கும் தார்மீகக் கடமையும் அவர்களுக்கு உண்டு. தமிழ்மணத்தின் நிர்வாகிகள் உட்பட அனைவருமே அடிப்படையில் வலைப்பதிவர்கள் தான் என்பதால் தமிழ்மணம் குறித்த பிரச்சினைகளை யார் எங்கு பதிவு செய்தாலும் அவர்களும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தால்தான் தமிழ்மணம் பொது அமைப்பாக அமையும்.
(மனறத்தில் பிரச்சினைகள் எழுப்பப்படுவதால் அவை ஒரே இடத்தில் தலைப்புகளின் அடிப்படையில் சேகரிக்கப்படுகிறது என்ற பயன் இருந்தாலும் மன்றத்தில் நுழைந்து பதிவிடுவதில் வேகக்குறைவு உள்ளிட்ட பல பிரச்சினைகள். பலசந்தர்ப்பங்களில் மன்றம் திறப்பதற்கு வெகுநேரம் காத்திருக்கும் அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. அவரவர் பதிவிலிருந்தே மன்றத்திற்கு எளிதாகச் செல்லும்படி அமைக்க முடியுமா என்று பாருங்கள்.)
என்னைப் பொறுத்தவரை இன்றைய பிரச்சினைகளுக்கு தமிழ்மணமோ அதன் நிர்வாகிகளோ பொறுப்பேற்க முடியாது. அதே சமயம் தொழில் நுட்பத்தீர்வுகள் குறித்து மற்றவர்களை விட தமிழ்மணம் நிர்வாகிகள் அதிகமாக சிந்திக்க முடியும். சிந்திப்பார்கள்; சிந்திக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சொல்லிச் செய்வதை விட சொல்லாமலே செய்வது நல்லதென்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது.
***
பூனைக்கு யார் மணி கட்டுவது என்றிருந்த சூழலில் அருணாவின் பதிவில் ஆரம்பித்து வழக்கம் போலவே மாலன் தான் அதைச் செய்திருக்கிறார். மாலன் வலைப்பதிவுகளை விட்டு விலகியபோதும் சரி இப்போதும் சரி அவரது கருத்துக்களில் பல எனக்கு உடன்பாடாக இல்லை. அதை நான் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறேன். அதேசமயம் வலைப்பதிவர்கள் சில்ர் தனிப்பட்ட முறையில் மாலன் மீது தொடுக்கும் தாக்குதல்களும் எனக்கு உடன்பாடாக இல்லை.
சுரேஷ்கண்ணன் எழுதிய 'தமிழ்மணம்' காசியுடன் ஒரு சந்திப்பு* என்ற பதிவில் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பட்டியலில் மாலனின் பெயரையே அவர் குறிப்பிடவில்லை. இது தானாக நிகழ்ந்த தவறென்று கூறமுடியாது.
அடுத்து 'காசியிடம் சில கேள்விகள் கேட்டவருக்கு...' என்ற பதிவை இப்படித் துவங்குகிறார்:
//மாலன் என்பவர் தமிழ்மணம் திரட்டித் தருகிற..................................................//
எதனாலோ மாலன்மீது கொண்ட தனிப்பட்ட வெறுப்புதான் உங்களை இப்படிச் செய்யத் தூண்டியிருக்கிறது. ஆனாலும் கீழே இப்படியும் எழுதியிருக்கிறீர்கள்.
//மாலன் அவர்களே... இந்த விஷயத்தில்தான் உங்களோடு மாறுபடுகிறேனே ஒழிய, மாலன் என்கிற படைப்பாளியிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன் என்பதையும் உங்கள் மனதின் ஒரத்தில் குறித்துக் கொள்ளவும்//
மரியாதை உள்ளவர் 'மாலன் என்பவர்' என்று எழுத அவசியமென்ன?
மூத்த வலைப்பதிவர்களில் (வயதில் அல்ல) பலரும் தங்களுக்கு தமிழ் வலைப்பதிவுகளை அறிமுகப் படுத்தியவர் அல்லது வலைப்பதிவுகளில் எழுதத் தூண்டியவர் மாலன்தான் என்று தெரிவித்திருந்தனர். அதற்கான மரியாதையாவது, ஒரு முக்கிய தமிழ்ப் படைப்பாளி என்ற அளவிலாவது தேவையற்ற வார்த்தை விடுதல்களைத் தவிர்ப்பது நல்லது. கருத்து முரண்பாடுகளை நாகரிகமாகத் தெரிவித்தால் புரிந்து கொள்ள முடியாதவர் அல்ல.
இது போன்ற செயல்பாடுகளே படைப்பாளிகளை நம்மிடமிருந்து அன்னியப்படுத்த காரணமாக அமைந்தவை என்பதற்கு "வாசகர்களுடன் குறைந்த பட்ச தூரம் வேண்டும்" என்ற சுஜாதாவின் கூற்றும் ஒரு உதாரணம்.
Monday, February 14, 2005 /
வலைப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம். மாற்றியமைக்கப் பட்ட வடிவத்தில் இந்த வலைப்பதிவிற்கு தமிழ் மணம் திரட்டி குறித்த சில விமர்சனங்களுடன் இன்று மீண்டும் வந்திருக்கிறேன்...
தமிழ்மணம்- காசி அவர்களால் தமிழ் வலைப்பதிவுலகிற்கு வழங்கப்பட்ட அருங்கொடை. பதிவுகளை திரட்டித்தர உருவான தமிழ்மணம் இன்று தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சியும் கண்டிருக்கிறது. இதில் நான் கண்ட சில ஐயப்பாடுகள் குறித்து....
1. மன்றம் மிக பயனுள்ள பிரிவு. ஆனால் அதன் அமைப்பு தெளிவாக இல்லாதது போல எனக்குப் படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஏராளமான சுட்டிகள் இருப்பது போன்ற தோற்றம். உள் நுழைவும் எளிமைப் படுத்தப் பட வேண்டும். எனக்கு மன்றத்தின் பக்கங்கள் திறக்க நிறைய நேரம் ஆகிறது. மறுமொழி/கருத்தை இட சிரமம் உள்ளதாகத் தோன்றுகிறது. புதிய கருத்துக்களை வாசிப்பதிலும் நிறைவு தோன்றவில்லை.
2..தமிழ்மணத்தின் ஆரம்பத்தில் "வலைப்பதிவுகள் இயங்கு எழுத்துரு பயன்படுத்துகின்றனவா? யூனிகோடில் அமைந்திருக்கிறதா? மோசில்லா போன்ற உலவிகளுக்கு தக்கவாறு justify போன்ற நிரல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதா?" என்பதையெல்லாம் சோதித்து பட்டியலிட்டு அறிவித்துக் கொண்டிருந்தது. பிறகு அந்தப் பக்கத்தைக் காணவில்லை. நாங்கள் பயன்படுத்தும் இயங்கு எழுத்துரு/நிரல்கள் சரியாக இயங்குகிறதா என்று சோதித்தறிய ஏதாவது வழியுண்டா?
3...வாசகர் பக்கத்தில் தேடல் சுட்டியை உரைச்சுட்டியாக மாற்றித் தரலாம். உ-ம்... "பதிவுகளில் தேட"
பொதுவான கணினி தொடர்பான ஒரு சந்தேகம்!
லினக்ஸ் இயங்குதளத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி இயங்குமா? அவ்வாறு பயன்படுத்துவோர் இருக்கிறார்களா?